நீரின்றி அமையாது உலகு
தமிழும் அறிவியலும் தொடர்-1
வணக்கம் அன்பு நண்பர்களே! இந்த தொடர் கட்டுரை படிப்பதற்கு வந்த தங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்த பகுதியில் தமிழன் அறிவியல் துறையில் முன்னோடியாக விளங்கியதற்கு சான்றாக அமைந்துள்ள ஆதாரங்கள் மற்றும் அறிவியல் தொடர்புகள் பற்றி விரிவாக பார்ப்போம்.
நாம் வாழும் உலகத்தின் நீர் ஆதாரம் 97 % கடல் நீராலும் (Ocean water), 3 % நன்னீராலும் (Fresh water) ஆனது. இந்த 3 % நன்னீர் தான் உலகத்தில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் இன்றியமையாதது என்று சொன்னால் அது மிகை ஆகாது. இந்த நன்நீரிலும் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிததிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனிக்கவிகைளில் உறைந்து இருக்கிறது. மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. இந்த நன்னீரின் முதல் முக்கியமான முலம் மழை நீர் தான்.அந்த மழை நீர் உருவாக காரணமாக இருக்கும் அறிவியல் — நீர்ச் சுழற்சி அறிவியல் அதை பற்றி விரிவாக காணலாம்.

நீர் சுழற்சி என்பது பூமியின் மேற்பரப்புக்கு மேலேயும் கீழேயும் தொடர்ச்சியாக இயங்கும் நீரின் இயக்கத்தைக் குறித்த செயல்பாடாகும். பூமியிலுள்ள நீரின் அளவு காலப்போக்கில் தொடர்ந்து நிலையாகவே இருந்து வருகிறது.ஆனால் பனி, நன்னீர், உப்பு நீர் மற்றும் வளிமண்டல நீர் ஆகிய முக்கிய நீர்த்தேக்கங்களில் அதை பகிர்ந்து வைத்தல் என்பது பரந்த அளவிலான காலநிலை மாறுபாடுகளைச் சார்ந்துள்ளது. நீர் சுழற்சி சூரியனால் இயக்கப்படுகிறது. அது பெருங்கடல் மற்றும் கடல் போன்ற நீர்தேக்கங்களிலுள்ள நீரை சூடாக்குகிறது. நீர் நீராவியாக மாறி காற்றில் கலக்கிறது, மற்றும் மண்ணிலுள்ள தாவரங்களும் அங்குள்ள நீரை நீராவியாக்குதல் செயல்முறை முலம் நீராவியை உருவாக்கி காற்றில் கலக்கின்றன.

இப்படி உருவாக்க பட்ட நீர் ஆவியிலுள்ள நீரின் மூலக்கூறு, வளிமண்டலத்திலுள்ள நைட்ரசன் (N2) மற்றும் ஆக்சிசன் (O2 ) வாயுக்களைவிட குறைந்த மூலக்கூறு நிறையை உடையது.எனவே இதன் அடர்த்தி குறைவானதாக உள்ளது. குறிப்பிடத்தக்க இந்த அடர்த்தி வேறுபாடு காரணமாக ஈரக்காற்று மிதக்குந்தன்மை பெற்று மேலே உயர்ந்து மிதக்கிறது.
உயரம் அதிகரிக்க அதிகரிக்க காற்றின் அழுத்தம் குறைந்து வாயு விதிகளின் படி வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது. இதை நாம் நெறைய தடவை நம் வாழ்க்கையில் உணர்ந்து இருக்கிறோம். உதாரணமாக கொடைக்கானல்
அல்லது ஊட்டி செல்லும்போது மலை அடிவாரத்தில் சற்று வெது வெதுப்பான காலநிலை இருப்பதும் மலை உச்சியில் குளிர்ச்சியான காலநிலை காணப்படுவதும் நாம் அறிந்த ஒன்று.
வெப்பநிலை குறைவால் நீராவி சுருங்கி சிறிய சிறிய திரவ நீர்த் துளிகளாக மாறுகிறது.விண்ணில் உள்ள நீராவி குளிர்ச்சியடைந்து பெரும்பகுதி மழையாக புவியின் மேற்பரப்பை அடைகிறது.
சுருக்கமாக, நீர் சுழற்சி அறிவியல் சூரியனால் இயக்கப்படுகிறது. அது கடல், ஆறு மற்றும் பிற நீர் நிலைகளில் இருந்து நீர், நீராவி ஆகி மேகங்களில் படிந்து மழை பொழிகிறது.
இந்த கருத்துப்படிவத்தை நீர்ச்சுழற்சி அறிவியல் என்றும் Bernard Palissy (வருடம் 1580) என்பவர் இதன் கண்டுபிடிப்பாளர் என்றும் கருதப்படுகிறார்.
இதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் (8 ஆம் நூறாண்டுகளில் வாழ்ந்தவர்) அருளி செய்த திருப்பாவைகளில் நான்காம் பாசுரத்தில் இந்த நீர் சுழற்சி அறிவியல் பற்றி குறிப்பு இடம் பெற்று உள்ளது. அந்த பாடல் பின்வருமாறு
“ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்”

“பெரும் மழை பொழியக் காரணமான தலைவனே, நீ உன் கையில் மழையை கொஞ்சமும் ஒளித்து வைத்துக் கொள்ளாமல் முழுஅளவிற்கு பொழிய வேண்டும்.கடலில் உள்ள நீரினை எடுத்துக் கொண்டு ஆவியாகி மேலே சென்று உலகாளும் முதல்வனான கண்ணனின் உடல் நிறத்தினை போல் கருமேகங்களாக திரள்வாயாக.திருமாலின் வலக்கையில் உள்ள சக்கரத்தைப் போல் ஒளியுடன் மின்னுவாயாக மற்றும் இடக்கையில் உள்ள வலம்புரிச் சங்கு எழுப்பும் ஒலியைப் போல் இடி முழக்கம் செய்வாயாக.
திருமாலின் கரத்தில் இருக்கும், வில்லிருந்து புறப்படும் அம்புகள் போல் மழையை சரம் சரமாகப் பொழிவாயாக. அம்மழையால் இவ்வுலகில் மகிழ்ந்து வாழ்வோம்” என்ற பொருளுடன் இந்த பாடல் அமைந்து உள்ளது.
இந்த பாடல் முலம் கடலிலிருந்து நீரை ஆவியாக்கி மழை பொழிய திருமால் அருள் வேண்டி ஆண்டாள் நாச்சியார் வேண்டுகிறார். நீர் நிலைகளில் இருந்து, நீரை ஆவியாக்கித்தான் மழை பொழிகிறது என்ற
அறிவியல் தெளிவாக பதிவு ஆகி உள்ளது.
ஆண்டாள் நாச்சியார் வழியில், கம்பர் (11 ஆம் நூறாண்டுகளில் வாழ்ந்தவர்) தன் நூலான கம்பராமாயணத்தில் பாலகண்டம் பகுதியில் ஆற்று படலத்தில் பின்வருமாறு பாடல் இரண்டை வைத்துஉள்ளார்.
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று. ஆர்கலி மேய்ந்து. அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கைதன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.
பம்பி மேகம் பரந்தது. ‘பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;
அம்பின் ஆற்றதும்’ என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே.

“கடலை நோக்கிச் சென்றபோது நீறு பூசிய சிவன்போல
வெண்ணிறம் கொண்டு. கடலில் நீர் கொண்டு திரும்பும்போது
திருமகளால் சீர்பெறும் திருமால் போலக் கார்நிறம் கொண்டு
மேகங்கள் இருந்தது என்றும், ஆறுகளெல்லாம் கடலில் கலப்பதால் ஆறுகளுக்கு கடல் கணவன் முறை வேண்டுமென்றும் , ஆறுகள் எல்லாம் மலையில் தொடங்குவதால் கடலுக்கு மலை மாமன் முறை வேண்டுமென்றும்,அந்த மலை மாமனின் வெப்பத்ததை ஆற்றுவிக்க மேகங்கொண்டு மழை பொழிகிறதாம் கடல்” என்ற பொருளுடன் இந்த பாடல் அமைந்து உள்ளது.
இந்த பாடல் முலம் மழை பொழியும்போது கடலிலிருந்து நீரை ஆவியாக்கி, மேகம் கறுத்து, மலையின் வெப்பத்ததை ஆற்றுவிக்க மேகங்கொண்டு மழை பொழிகிறது என்று குறிப்பின் முலம் நீர் நிலைகளில் இருந்து, நீரை ஆவியாக்கித்தான் மழை பொழிகிறது என்ற அறிவியலை தெளிவாக தன் பாடல் முலம் கம்பர் குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட இலக்கிய பாடல்கள் முலம், நீர்ச் சுழற்சி அறிவியலை தமிழர்கள் 8 ஆம் நூறாண்டு முதல் அறிந்து இருந்தனர் என்பது தெளிவாகிறது.
மேலும் உங்களை இன்னொரு தமிழும் அறிவியலும் தொடர் கட்டுரையில் சந்திக்குறேன். நன்றி வணக்கம் !